ஈரோட்டுக்கு கடந்த 6 ந் தேதி காலை வந்த அந்த.விஐபியால் ஈரோடு நகர் முழுக்க காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ் தான்.சரியாக முற்பகல் 11.30 க்கு இன்டர்சிட்டி ரயில் மூலம் ஈரோடு ரயில்நிலையம் வந்தார் அந்த வி.ஐ.பி. அடுத்த 15 நிமிடங்கள் ஈரோட்டில் உள்ள அனைத்து இணைப்பு சாலை சிக்னல்களும் அணைக்கப்பட்டது.
இருசக்கர வாகனங்கள் கூட தடுத்து நிறுத்தப்பட்டது. கருப்பு பூணை இசட் பிரிவு பாதுகாப்பு படையினர் சூழ மிகுந்த பாதுகாப்பு வளையத்தில் அந்த வி.ஐ.பி. அழைத்துச் செல்லப்பட்டார். வந்தவர், சென்றவர், எங்கே போகிறார் அவர் என்று ஒருசில போலீல் அதிகாரிகளை தவிர்த்து யாருக்குமே தெரியாது. அந்த முக்கிய நபர் பொதுமக்கள் யாருக்கும் சுத்தமாக தெரியவில்லை.
ஆனால் அவர் தான் இந்திய அரசியல் அதிகார மையத்தின் இரண்டாவது தலைவர் .
முதல் தலைவர் அரசியலமைப்பு சட்டப்படி ஜனாதிபதியாவார். அவர் டெல்லியில் இருப்பார். ஆனால் எந்த சட்டத்திலும் இல்லாத இந்த விஐபி தற்போதுள்ள ஜனாதிபதிக்கே தலைவராவார். இவர் நாக்பூரில் இருக்கிறார்.
ஆம் இந்தியாவின் இரண்டாவது அதிகார மையமான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இவர்தான் ஈரோடு வந்தார். ஈரோட்டில் நடைபெறும் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காகவே மோகன் பகவத் ஈரோடு வந்திருந்தார்.
சென்ற ஆறாம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஈரோடு யு. ஆர் சி பள்ளியில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விட்டு 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோட்டிலிருந்து கிளம்பி கேரளா மாநிலம் புறப்பட்டுச் சென்றார் மோகன் பகவத்.
ஈரோட்டில் தங்கிய நான்கு நாட்களும் ஆயிரக்கணக்கான போலீசார் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் நடந்த பள்ளி மற்றும் ஈரோடு முழுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.