முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்தநாளையொட்டி சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “இந்தியாவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியவர் ராஜீவ் காந்தி. தொலைபேசி, கணினி ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்றே செய்தவர்.
சமூக அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை இயற்றியவர், பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை வேண்டும் என வலியுறுத்தி நடவடிக்கை எடுத்து கிராமப்புற வளர்ச்சி அடைந்ததற்கு ராஜீவ் காந்தியின் பணி மிகவும் முக்கியமானது. அவர் மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றியவர். இந்தியா, சீனா நாடுகளின் 50 ஆண்டுகால பகையை உடைத்து புதிய சீன கொள்கையை ஏற்படுத்தியவர். தமிழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் பெட்ரோல் விலை ரூ. 3 குறைத்தது மிகவும் பாராட்டுக்குரியது. அரசியல் ஜாம்பவான் என கூறிக்கொள்ளும் மோடி இதுவரை பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை. தமிழகத்திற்குத் தர வேண்டிய சிறப்பு நிதி உள்ளிட்ட ஜிஎஸ்டி தொகையைத் தராமல் வஞ்சித்துவருகிறார்.
தமிழக அரசு, 100 நாட்களில் செய்ய வேண்டிய பணியைத் தாண்டியும் செய்துவருகிறது. கோரிக்கையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்கள் என்று அவர் மீது உறுதியான நம்பிக்கை உள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சமூகநீதி, அதில் தவறு இல்லை” என்றார். இவருடன் கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், விருதாச்சலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், சிதம்பரம் நகரத் தலைவர் பாலதண்டாயுதம், காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கீன், ஜெமினி ராதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.