நெல்லையிலுள்ள பழைய பேட்டைச் சாலையில் அதிகாலை வேளையில் வாகன சோதனையிலிருந்த நெல்லை டவுன் போலீசார் வேகமாக வந்து கொண்டிருந்த காரை மடக்கி விசாரணை செய்துள்ளனர். முரண்பாடான தகவல் வரவே அதிலிருந்தவர்களையும் சோதனை செய்ததில் ரூ.16 லட்சம் ஹாட்கேஷ் சிக்கியிருக்கிறது. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது.
ஸ்பாட்டிற்கு வந்த டவுன் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி ஆகியோரின் விசாரணையில் தென்காசியை சேர்ந்த கல்யாணகுமார் நெல்லை டவுனை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்று தெரியவர, அதிலிருந்த கல்யாணகுமார், தென்காசியிலுள்ள தனது கயிறு திரிக்கும் ஆலையை விரிவுபடுத்த நெல்லை டவுன் வடமாநில புள்ளியான ஜெயந்திலாலிடம் கடன் பெற்று செல்வதாக தெரிவித்திருக்கிறார். அடுத்த நொடியில் ஜெயந்திலாலின் வீட்டை முற்றுகையிட்டுச் சோதனை செய்ததில் ரூ.44 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு அவர்கள் அனைவரோடும் ஜெயந்திலாலின் தந்தை ஹத்தேவ் சந்த்தும் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டனர்.
அதையடுத்து வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் காவல் நிலையம் வந்த வருமான வரித்துறையின் உதவி இயக்குனரான காசிசங்கர் தலைமையிலான அதிகாரிகள், ஜெயந்திலால் அவரது தந்தை ஹத்தேவ் சந்த், கல்யாணகுமார், ராமகிருஷ்ணன் நால்வரிடமும் விசாரணை நடத்தினர்.
வருமான வரித்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் பணத்திற்கான உரிய கணக்குகளைக் காட்டிவிட்டு பணம் மற்றும் வாகனங்களை திரும்ப எடுத்து செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமாநிலமான ராஜஸ்தானை சேர்ந்த சேட்கள், லால்கள் நெல்லையில் பல இடங்களில் உள்ளனர். தங்க வைர நகை வியாபாரத்திலும் தொடர்புடையவர்கள். சிக்கிய பணம் ஹவாலா பரிவர்த்தனையா அல்லது கமிஷன் அடிப்படையில் நடத்தப்படும் தங்க வைர வியாபாரப் பணமா என்பது விசாரணையில் தெரியவரும் என்கிறார்கள்.