உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இன்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என 122 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான நெரிசலில் விலைமதிப்பற்ற உயிர்களின் சோகமான இழப்புகளால் ஆழ்ந்த வேதனையில் ஆழ்ந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் துயரம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.