பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தேவரின் சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் பத்தரை கிலோ எடை கொண்ட வெள்ளிக்கவசத்தை தேவர் நினைவிடத்தின் பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் வழங்கினார்.
அதன் பிறகு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓபிஎஸ், 'எதன் சார்பாக இந்த வெள்ளி கவசம் வழங்கப்பட்டது என்ற' கேள்விக்கு, 'அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். அந்த அடிப்படையில் அதிமுக சார்பில் வெள்ளிக் கவசத்தை வழங்கி இருக்கிறேன். அதிமுக சார்பில் வெள்ளிக்கவசத்தை அறக்கட்டளையில் ஒப்படைத்து விட்டோம். ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு 13 கிலோ தங்கக் கவசத்தை குருபூஜை நடக்கின்ற நன்னாளில் சாத்தப்பட வேண்டும் என்று அப்பொழுது பொருளாளராக இருந்த என்னையும், இத்திருக்கோவிலின் அறங்காவலராக இருக்கக்கூடிய பெரியம்மா காந்தி மீனா அவர்களையும் நியமித்திருந்தார்கள்.
அதனடிப்படையில் இதுவரை தங்கக் கவசத்தை இங்கு கொண்டுவந்து தேவர் சிலைக்கு சாற்றிவிட்டு குருபூஜை நிறைவடைந்த உடன் எடுத்துச் சென்று வங்கியில் வைக்கக்கூடிய பழக்கம் இருந்தது. 2017 ஆம் ஆண்டும், இந்த ஆண்டும் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்வு தடைப்படுகிற சூழல் ஏற்பட்டது. இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கின்ற நான், 'கலெக்டரிடம் இந்த தங்கக் கவசத்தை கொடுத்து குருபூஜைக்கு எந்த ஒரு இடையூறும் வராமல் எப்பொழுதும் போல் தங்கக் கவசம் தேவர் சிலைக்கு சாற்றப்பட வேண்டும்' என்று ஏற்கனவே 25 தினங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்து விட்டோம்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் சீனிவாசன் தற்காலிக பொருளாளர் என்று சொல்லிக்கொண்டு அவர்தான் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு எடுத்துச் சென்றார். அந்த வழக்கை நாங்களும் எதிர்கொள்கின்ற சூழல் ஏற்பட்டது. நாங்கள் நீதிமன்றத்தில் சொன்னோம் 'எந்த தாமதமும் இல்லாமல் தங்கக் கவசம் செல்ல வேண்டும் அதுதான் முறையான செயலாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். ஆகவே இங்கே மாவட்ட நிர்வாகத்திடம் தங்கக் கவசத்தை தந்து அவர்களே எடுத்துக் கொண்டு அறக்கட்டளையினுடைய தலைவராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய காந்தி மீனாவிடம் தந்து தங்கக் கவசத்தை குருபூஜையில் வைத்து சிறப்பிக்க வேண்டும். அதேபோன்று மீண்டும் வங்கியில் வைப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் கொடுத்து விட்டோம்' என்று.
அவர்கள் எங்களிடம்தான் தர வேண்டும் என்று வழக்கு போட்டார்கள். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. எங்களுடைய கோரிக்கையில் இருக்கின்ற நியாயத்தை உணர்ந்து அந்த தங்கக் கவசம் அறக்கட்டளையின் தலைவரிடமும், மாவட்ட நிர்வாகத்திமும் தர வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதேபோல் அதிமுக சார்பாக இன்று வெள்ளிக்கவசம் தந்திருக்கிறோம்'' என்றார்.