அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழக அரசு, கலைஞர் உரிமத் தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தது. சுமார் ஒரு கோடிக்கும் மேலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு முன்னதாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தப்பட்டுச் சரிபார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.
செலுத்தப்பட்ட தொகை வங்கிக் கணக்கில் ஏறியுள்ளதா என்பதை அறிந்துகொள்ளப் பெண்கள் வங்கிகளில் கூடி வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில், பெண்கள் அலை கடலெனத் திரண்டு தங்களுக்கு ஆயிரம் ரூபாய் வந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வந்ததால், அந்தப் பகுதியே பரபரப்பானது. ஏற்கனவே இந்தியன் வங்கியில் முதியோர் உதவித் தொகை, 100 நாள் வேலைக்கான தொகை மற்றும் அரசு ஊழியர்கள் என வங்கியில் பணம் எடுக்கவும் செலுத்தவும் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் இந்தியன் வங்கியில், அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் தங்களது கணக்கில் ஏறிவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் வங்கியில் நெரிசல் ஏற்பட்டது. வங்கியில் சர்வரும் பழுதடைந்த நிலையில், நீண்ட நேரமாக வரிசையில் நின்று முதியோர்கள் பெண்கள் காத்திருந்தனர்.