ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு இரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த ரயில் விபத்தில் 288 பேர் இறந்துள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து ரயில் விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் எச்.ராஜா, “ஒடிசா ரயில் விபத்து சதி வேலையாக இருக்கலாம். விபத்து நடந்த அந்த நிமிடத்திலிருந்து அந்த ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவாக இருக்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள்ளே நக்சலைட்டுகளால் நிறைய ரயில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்” என்றார்.