விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஞானோதயம் என்ற சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியில் வளத்தி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் குமரேசன், காவலர்கள் ஷேக் அப்துல்லா, லட்சுமி நாராயணன், மனோஜ் குமார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செஞ்சி நோக்கி வந்த மினி லாரி ஒன்றை மடக்கி நிறுத்தி போலீசார் அதை சோதனையிட்டனர்.
அதில் 12 அட்டைப்பெட்டிகளில் பதினெட்டாயிரம் குட்கா பாக்கெட்டுகள் அடைக்கப்பட்டு கடத்திவந்தது தெரியவந்தது. போலீசார் அனைத்து குட்கா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ஏழு லட்சம் என தெரியவருகிறது. இந்த குட்கா பாக்கெட்டுகளை செஞ்சியில் உள்ள ஒரு மொத்த விற்பனையாளரிடம் ஒப்படைத்து, அவர் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து லாரியில் கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் பெங்களூரு பொம்மேனி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவரை போலீசார் கைதுசெய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். மாவட்ட எல்லையில் காவலர்கள் தீவிர சோதனையை மேற்கொண்டு குட்கா கடத்தலைத் தடுத்து கடத்தியவரை கைது செய்துள்ளதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். டாஸ்மாக் சரக்கு கிடைக்காத குடிமகன்களுக்கு எந்தவகையிலாவது போதை ஏற உதவி செய்ய வேண்டும். அதைப்போல் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கள்ள மது பாட்டில்களும், குட்கா போன்ற போதை ஏறும் புகையிலைப் பொருட்களும் தமிழகத்தில் மிக வேகமாக ஊடுருவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.