கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட கிருத்திகா காவல்நிலையத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தென்காசியை அடுத்த இலஞ்சி பகுதியின் கொட்டாகுளம் ஏரியாவைச் சேர்ந்த மாரியப்பன் சவுதியில் சாஃப்ட்வேர் பணியிலிருந்தவர். இவரது இளைய மகன் வினித். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியிலிருந்து வந்த நவீன் பட்டேல் - தர்மிஸ்தா பட்டேல் தம்பதி இதே பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகிறார்கள். அவர்களின் மூத்த மகள்தான் கிருத்திகா. பள்ளிப்படிப்பை முடித்த வினித் மேற்படிப்பிற்குப் பின் சென்னையிலுள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணியிலிருந்திருக்கிறார். பட்டப்படிப்பு முடித்த கிருத்திகா டிப்ளமோ படிப்பிற்காக சென்னை வந்தபோது வினித் - கிருத்திகாவின் காதல் வளர்ந்திருக்கிறது.
இந்நிலையில், கிருத்திகாவும் வினித்தும் கடந்த மாதம் 20 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து 25ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருத்திகாவை வீடு புகுந்து கடத்திச் சென்றனர். பட்டேல் குரூப் கிருத்திகாவைக் கடத்திய வீடியோ வைரலாகவே டி.ஜி.பி. சைலேந்திரபாபு வரை போய் சம்பவம் சீரியசாகியிருக்கிறது. தென்காசி மாவட்டக் காவல்துறையின் மீதான தனது கடும் அதிருப்தியை டி.ஜி.பி. வெளிப்படுத்திய பிறகே நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கின்றன. எல்லாம் நடந்து முடிந்தபிறகே கிருத்திகாவின் தந்தை நவீன், தாய் தர்மிஸ்தா, டிரைவர் ராசு, உறவினர்களான விஷால், கிருத்தி, ராஜேஸ், மைத்ரிக் உள்ளிட்ட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில், கடத்தல் வழக்கு தொடர்பாக கிருத்திகாவின் பெற்றோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட வினித், தன் மனைவி கிருத்திகாவை மீட்பதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 11ம் தேதி கிருத்திகா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். அதேசமயம் கிருத்திகாவின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வினீத்துக்கும் கிருத்திகாவுக்கும் திருமணம் ஆனதற்கான ஆவணங்களை நீதிபதிகள் கோரினர். அதனை சரிபார்த்த பின், குஜராத்தில் கிருத்திகாவை திருமணம் செய்த மைத்ரிக் பட்டேல் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்பினர். அவர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தெரிவித்தது. கடந்த அக்டோபர் மாதமே கிருத்திகா - மைத்ரிக் திருமணம் நடந்ததாக பெண்வீட்டார் தரப்பில் கூறப்பட்டதற்கான ஆதாரங்களைக் கோரினர். அப்படி எதனையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை.
குஜராத்துக்கு கடத்தப்பட்ட கிருத்திகாவிடமும் நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினர். பெற்றோருடன் விரும்பியே சென்றதாக கிருத்திகா தெரிவித்த நிலையில், அக்டோபரில் மைத்ரிக்குடன் திருமணம் செய்த நிலையில் இங்கே ஏன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்? என்ற நீதிபதியின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார் கிருத்திகா.
பின் நீதிபதிகள், “கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெறவேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இருதரப்பும் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து வழக்கு பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணையில் கிருத்திகா கொடுத்த வாக்குமூலத்தில், வினித்தை 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும் வீட்டை விட்டு வெளியேறி வினித்தை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அவரை திருமணம் செய்தபின் அவருடன் கோவா சென்று 3 நாட்கள் தங்கி இருந்ததாகவும் கிருத்திகா கூறியுள்ளார். தன்னை யாரும் கடத்தவில்லை. விருப்பப்படியே வினித் உடன் சென்றேன். வினித்தை காதலித்ததால் எனது பெற்றோர் குஜராத் அழைத்து சென்று மைத்ரிக் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். பின் மீண்டும் வந்த பிறகு வினித் உடன் நட்பை தொடர்ந்ததாகக் கூறியுள்ளார்.
பின் வழக்கறிஞர் உதவியுடன் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி வினித்தை திருமணம் செய்து கொண்டதாகவும் கிருத்திகா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். நான் காணாமல் போனதாக தாய் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் காவல்நிலையத்தில் வினித்துடன் வந்து ஆஜர் ஆனேன். ஏற்கனவே எனக்கு நடந்த திருமணத்தை காவல் நிலையத்தில் கூறாமல் பெற்றோர் மறைத்துவிட்டனர்.
வினித்தின் குடும்ப கலாச்சாரம் பிடிக்காததால் அங்கிருந்து அழைத்துச் செல்லும்படி மைத்ரிக் பட்டேலிடம் கூறினேன். வினித்தின் தந்தை மாந்திரீக செயல்களில் ஈடுபட்டு வந்ததால் வினித்தை பிரிந்துவிட முடிவு செய்தேன். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் விருப்பப்படியே சென்றதாகவும் கூறியுள்ளார். நான் கேட்டுக் கொண்டதால் குற்றாலம் காவல் நிலையத்துக்கு சென்று வந்த போது என்னை எனது பெற்றோர் மற்றும் மைத்ரிக் அழைத்து சென்றனர். பெற்றோருடன் சேர்ந்து கேரளா மற்றும் கர்நாடகா சென்று பின் அங்கிருந்து குஜராத் சென்றோம். அகமதாபாத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் மைத்ரிக் உடன் நடந்த திருமணத்தை பதிவு செய்ததாகவும் கிருத்திகா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை ஐகோர்ட் மதுரை கிளையில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். இந்நிலையில், கிருத்திகாவை யாருடன் அனுப்புவது என்பது குறித்து நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.