Skip to main content

குஜராத் முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

Published on 05/08/2017 | Edited on 05/08/2017

குஜராத் முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

ராகுல்காந்தி கார்மீது கல்வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக குஜராத் முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் 
தொல்.திருமாவளவன் வலியுறுத்தலியுள்ளார். 

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச்சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கார் மீது பாசக ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இதில் அவரது காரின் கண்ணாடி உடைந்துள்ளது, அவருடன் சென்ற சிறப்புப் பாதுகாப்புப் படை காவலர் படுகாயம் அடைந்துள்ளார். ராகுல்காந்தி அவர்களோடு சென்ற வாகனங்கள் பல கல்வீச்சில் சேதமடைந்துள்ளன. இந்த வன்முறையைத் தடுக்காதது மட்டுமின்றி ராகுல்காந்தி அவர்களை ஏளனப்படுத்திப் பேசிவரும் குஜராத் மாநில முதலமைச்சர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

குஜராத் மாநிலத்தில் கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து  ஆறுதல் சொல்வது எதிர்கட்சித் துணைத்தலைவர் என்கிற முறையில் ராகுல்காந்தி அவர்களின் கடமையாகும்.  அந்த அரசியல் கடமையை ஆற்றச்சென்ற திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு உரிய பாதுகாப்புகளை குஜராத் மாநில அரசு செய்து தந்திருக்கவேண்டும். ஆனால், அதற்கு மாறாக ராகுல்காந்தி அவர்கள் குஜராத் மாநிலத்திற்கு வருவதை கேலிசெய்து அந்த மாநில முதல்வரே பேசி வந்ததோடு பாசகவினரை திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதன்காரணமாகவே திரு.ராகுல்காந்தி அவர்களின் கார்மீது கல்வீச்சு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு குஜராத் மாநில முதலமைச்சர்தான் பொறுப்பேற்கவேண்டும்.

வன்முறையை அரசியல் வழிமுறையாக பாசகவினர் கையில் எடுப்பது சனநாயகத்தையே  கேலிக்கூத்தாக மாற்றிவருகிறது. இதை கண்டித்திருக்கவேண்டிய இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மவுனம் காப்பது, அவரும் வன்முறையை ஆதரிக்கிறாரோ என்ற அய்யத்தை மக்களிடையே உருவாக்குகிறது. பிரதமர் அவர்கள் இந்தத் தாக்குதலை கண்டிக்க முன்வரவேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுகொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்