அரசுக்கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், சேலம் அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள சேவை மையத்தை நேரில் அணுகி விளக்கம் பெறலாம்.
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் முதல்முதலாக, அரசு கலைக்கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது. ஜூலை 20ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது. ஆன்லைன் விண்ணப்ப பதிவில், மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெளிவுபடுத்த, 38 மாவட்டங்களிலும் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
ஆன்லைன் விண்ணப்ப பதிவில் ஏற்படும் சந்தேகங்களையும், தேவைப்படும் விவரங்களையும் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள பிளஸ்2 மாணவர்கள் இந்த சேவை மையத்தை அணுகலாம். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் கூறுகையில், ''ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யப்படுவது என்பது இதுதான் முதல்முறை என்பதால், மாணவர்களின் நலன் கருதி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
எந்த இணையதள முகவரியில் விண்ணப்பிப்பது, தேவைப்படும் சான்றிதழ்கள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகவல்கள் குறித்த விவரங்களை இந்த சேவை மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவு, குறியீட்டு எண், மாணவர்களுக்கு உள்ள சலுகைகள் உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து வேலை நாள்களிலும் இம்மையம் செயல்படும்,'' என்றார்.