சுருக்குமடி வலைக்கு எதிராக ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்ட நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்றுமுதல் (23.08.2021) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடல் மீன்வளத்தைப் படுபாதாளத்திற்குக் கொண்டு செல்லும் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஒருவார காலமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில், நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சுருக்கு மடி வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், நாகை மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உறுதியளித்தார். இந்த நிலையில், போராட்டத்தில் இருந்த மீனவர்கள் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உத்தரவாத வேண்டுகோளை ஏற்று நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் அவரவர் விசைப்படகில் தொழிலுக்குச் சென்றனர். மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் மீனவர்கள் மட்டுமின்றி மீன்பிடி தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.