சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.6.30 கோடி மதிப்பிலான நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், ரூ. 259.91 கோடி மதிப்பீட்டில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 36 ஊரக குடியிருப்புகளுக்கான புதிய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசுகையில், ''கடலூர் மாவட்டத்திற்கு சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்வதற்கு ரூ 419 கோடிக்காண வரைவு திட்டத்தை அனுமதி அளிக்க கோரி அனைவரது முன்னிலையில் உள்ளாட்சி துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். தற்போது ரூ 260 கோடியில் அனைவரும் நல்ல குடிநீர் குடிக்கும் வகையில் புதிய திட்டத்தை தற்போது அளித்துள்ளார். இதற்கு கடலூர் மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. பழைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. சிதம்பரம் சுற்றுலா தளம் என்பதால் அலங்கார மின் விளக்குடன் நடைபாதையுடன் குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நகருக்கு உள்ளே வராமல் பேருந்து நிலையத்திற்கு செல்ல ரூ 40 கோடியில் வெளிவட்ட சாலை அமைக்கபடவுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மாதம் ரூ 1000 உள்ளிட்ட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடர்ந்து கேட்பதெல்லாம் கொடுப்பதால் மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் முதல்வர் இடம் பெற்றுள்ளார்'' என்றார்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 438 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி 34 லட்சத்து 49 ஆயிரத்து 169 ரூபாய்க்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள், வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ''தமிழ்நாட்டில் பேரூராட்சிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு 4 ஆயிரம் கோடி நிதியை முதல்வர் ஓதுக்கி வழங்கியுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 1972-ல் தொடங்கப்பட்டது. மொத்தம் இதுநாள் வரை 544 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு இதுவரை ஆண்டுக்கு 1 கோடி 70 லட்சம் பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளில் ஏழே கால் கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் நகராட்சி துறைக்கு ஆண்டு தோறும் 25 ஆயிரம் கோடி, ஊராட்சி துறைக்கு 21ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறையில் 8000 பொறியாளர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 2000 பேர்தான் உள்ளார்கள். குறைவாக இருந்தாலும் திட்டங்களை கால தாமதம் இல்லாமல் செயல்படுத்தி வருகிறார்கள். தற்போது 5000 பொறியாளரை புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண்துறை அமைச்சர் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.419 கோடி திட்டத்திற்கு வரைவு அறிக்கை கொடுத்து நிதி கோரியுள்ளார். முதல்வரிடம் தெரிவித்து நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அமைச்சர் கே.என்.நேரு.
முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் க.சிவராசு ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர். விழாவில் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ துரை கி.சரவணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைசெல்வன், நகரமன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமார், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் க.பழனி, முன்னாள் நகரமன்ற தலைவர் வி.எம்.எஸ். சந்திரபாண்டியன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், திமுக நிர்வாகிகள் ப.அப்பு சந்திரசேகரன், ஏஆர்சி.மணிகண்டன், நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நகராட்சி ஆணையாளர் மல்லிகா நன்றி கூறினார். முன்னதாக ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நடராஜர் கோயில் தெப்பகுளமான சிதம்பரம் ஞானப்பிரகாசர் குளம் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு புணரமைக்கப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் திறந்து வைத்தனர்.