Skip to main content

உயிரைப் பறித்த 'பச்சை ரத்தம்'- பலி வாங்கிய மூடநம்பிக்கை

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
nn

கோவில் திருவிழாவில் ஆட்டு கிடா ரத்தம் குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கொப்பலூர் செட்டியாம்பாளையம் கிராமம். அங்கு அண்ணமார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 'பரண் கிடாய்' என்ற பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று அக்கோவிலில் பரண் கிடாய் பூஜை நடைபெற்றது. அதாவது செங்குத்தாக நிற்க வைக்கப்பட்ட கற்கள் மீது அமைக்கப்பட்ட பரண் போன்ற அமைப்பில் வைத்து பக்தர்கள் கொடுக்கப்படும் ஆட்டு கிடாய்கள் பூசாரிகளால் வெட்டப்படும்.

ஆட்டுக்கடாய்களை வெட்டும் போது வெளிப்படும் ரத்தத்தை பூசாரிகள் வாழைப்பழத்தில் பிசைந்து சாப்பிடுவது என்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நல்ல கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பூசாரியான பழனிசாமி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பூசாரிகள் நேற்று கோவிலில் பரண் கிடாய் பூஜை செய்தனர்.  இதில் 20க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிசாமி உள்ளிட்ட ஐந்து பூசாரிகளும் குடித்துள்ளனர். சிலர் வாழைப்பழத்தை ரத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்டின் பச்சை ரத்தத்தில் உள்ள நுண்ணுயிர் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்