நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.