தமிழகத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகியவை திருநங்கைகளை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளார்கள்.
தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக விசிக தொடங்கி வைத்த அரசியல் அங்கீகாரம் இன்று அனைத்து கட்சிகளும் அங்கீகரித்து வருகின்றது. அந்தவகையில் வேலூர் மாநகராட்சியில் 37 வது வார்டு கவுன்சிலராக திருநங்கை கங்காவை திமுக களமிறக்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மண்டலத்தில் 112 வார்டு அதிமுக சார்பாக திருநங்கை மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளரான ஜெயதேவியை களமிறக்கியுள்ளது. சென்னை திருவிக நகர் மண்டலத்தில் 76 வது வார்டில் பாஜக திருநங்கை ராஜம்மாவை களமிறக்கியுள்ளது.
இதுகுறித்து திருநங்கையான கிரேஸ்பானுவிடம் கேட்டபோது, ''அரசியல் அங்கீகாரம் திருநங்கைகளுக்கு முதன்முதலில் விசிக துவங்கி வைத்தது. அதைத்தொடர்ந்து பல தேர்தல்களில் சில திருநங்கைகள் தன்னிச்சையாகவும், கட்சி சார்பாகவும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்த செயலை மிகச்சிறந்ததாகப் பார்க்கிறேன். அனைத்து பெரிய கட்சிகளும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெவிப்பதோடு, அவர்கள். வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன். அதுமட்டும் இல்லாமல் எமக்கான கோரிக்கையான திருநங்கைகளுக்கு தனித்தொகுதி வேண்டும்'' என்றார்.