Skip to main content

‘கிராமசபை கூட்டங்களை அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்வது ஜனநாயக விரோதப் போக்கு’ - செந்தில் ஆறுமுகம்

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

Grama saba meeting senthi aarumugam
                                                                          மாதிரி படம்


அக்டோபர் 2ஆம் தேதி நடக்கவேண்டிய கிராமசபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இதனை எதிர்க்கட்சியான திமுக கண்டித்து தடையை மீறி கிராமசபை கூட்டத்தை நடத்தியது.

 

கிராமசபை கூட்டத்தை இரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

 

“உள்ளாட்சி அமைப்புகளை ஊழல் செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்துவீர்களா?வன்மையாகக் கண்டிக்கிறோம்.. ரத்து செய்யப்பட்ட கிராமசபைகளை மீண்டும் நடத்த உத்தரவிடவேண்டும்.  (செப் 26) அன்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் கிராமசபைகள் நடத்த ஆணை பிறப்பிக்கிறார் (ந.க.எண்: 670/2020). அப்போது கரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால், 5 நாள் இடைவெளியில், விடிந்தால் கிராமசபை நடக்கும்வேளையில் முந்தைய நாள் இரவில் (அக் 1) கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்வது ஏன்? 

 

5 நாளில் கரோனாவின் பரவல் பன்மடங்கு தமிழகத்தில் பெருகிவிட்டதா? தியேட்டர்களை திறக்குமளவுக்கு தளர்வுகள் வந்துவிட்ட பிறகு, கிராமசபை கூட்டங்களை ரத்து செய்வது அப்பட்டமான அரசியல்.  கிராமசபையில் பங்கேற்று உள்ளாட்சியை வலுப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கிராமங்களில் களம் இறங்கும் வேளையில், ஆளுங்கட்சியோ அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சியை அதலபாதாளத்தில் குழிதோண்டி புதைப்பதற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.   

 

இந்த ஜனநாயக விரோதப் போக்கை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாநில சுயாட்சிக்கு குரல்கொடுத்த அண்ணாவின் பெயரை தனது கட்சிப்பெயரில் வைத்திருக்கும் ஆளுங்கட்சியானது கிராம சுயாட்சிக்கு சமாதி கட்டுவது எந்தவகையில் நியாயம். தமிழக உள்ளாட்சி வரலாற்றில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத ‘வரலாற்று சாதனையாக’  கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு இன்னும் தேர்தலே நடத்தப்படவில்லை. கிராமப் பஞ்சாயத்துகளிலும் இன்னும் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. 

 

ஆகமொத்தம், உள்ளாட்சி அமைப்புகள் என்பது ‘ஊழல்’ செய்வதற்கு மட்டுமே உபயோகமாவது; கொள்ளையடிப்பதற்கு மட்டுமே அவசியமானது; அதில் கிராமசபை கூட்டங்கள் நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன என்றபோக்கில் ஆளுங்கட்சி செயல்படுவது ஜனநாயக விரோதப் போக்கின் உச்சம்.  

 

கிராமப்பகுதிகளில் கரோனாவின் பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில், கிராமசபை ரத்து செய்யப்பட்ட கிராமங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி கிராமசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு உடனடி உத்தரவு வழங்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்