திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆழித் தேரோட்டம் சற்று முன்பு வெகு விமரிசையாக தொடங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார். சில நாட்களாக தமிழகத்தில் கரோனா மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், திருவிழாவில் மக்கள் அதிகமாக கூடுவர் என்பதால் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (25.03.2021) நடைபெறுகிறது. 96 அடி உயரம் 400 டன் எடை கொண்ட ஆழித் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது இந்த வருடம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு ஆழித் தேர் நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.