தர்மபுரி அருகே, போலி பணி நியமன ஆணை வழங்கி எம்.பி.ஏ பட்டதாரியிடம் 19 லட்சம் ரூபாய் சுருட்டிய சேலம் வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோலையானூரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (29). எம்.பி.ஏ பட்டதாரி. அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (30) என்பவர், மோலையானூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று வந்ததில், சந்தோஷூடன் அறிமுகம் ஏற்பட்டது.
சந்தோஷ், அரசு வேலைக்காக முயற்சி செய்து வருவதை அறிந்து கொண்ட சந்தோஷ்குமார், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை காலியாக இருப்பதாகவும், தனக்குத் தெரிந்த அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகள் மூலமாக அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் ஆசை வலை விரித்துள்ளார். இதையடுத்து, சந்தோஷ்குமார் கேட்டிருந்தபடி அவரிடம் சந்தோஷ் 19 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட சந்தோஷ்குமார், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் பணிக்கான நியமன ஆணை கடிதத்தை சந்தோஷிடம் கொடுத்துள்ளார்.
மாநில அரசுப்பணியை எதிர்பார்த்திருந்த நிலையில், தனக்கு ரயில்வேயில் வேலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் பணியில் சேர சென்றபோதுதான், தான் கொண்டு சென்றது போலியான பணி நியமன ஆணை என்பது சந்தோஷூக்கு தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து தன்னை சந்தோஷ்குமார் ஏமாற்றி, மோசடி செய்து பணம் பறித்துள்ளார் என்பதை அறிந்த சந்தோஷ், இதுகுறித்து தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் சந்தோஷ்குமார் மட்டுமின்றி, சேலத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் ராஜ்குமார், நந்தகுமார் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அதன்பேரில் காவல்துறையினர் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.