"என் தங்கச்சிக்கு ஒரு டாய்லலெட் கட்டித் தரனும் சார்" எனும் தலைப்பில், ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதையை செய்தியாக்கி, அதை வீடியோவாக, மார்ச் 8 அன்று வெளியிட்டோம். செய்தி வெளியான மறுநாளே, அந்த குடும்பத்திற்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ளார் சிவகங்கை ஆட்சியர்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அருகே உள்ளது திருமன்பட்டி கிராமம். நீல தார்ப்பாய் தெரியும் ஓட்டு வீட்டில் லட்சுமணனும் அவரது தங்கையும் வசித்து வருகின்றனர். மண்சுவர்களால் எழுந்து நிற்கும் வீட்டில், சீமை ஓடு போடப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ஓட்டைகளாக இருந்தது. வீட்டுக்குள் சர்வசாதாரணமாக நடமாடும் பாம்பு, விஷப்பூச்சிகள் என சதா நேரமும் அச்சத்திலேயே வாழவேண்டிய அவலநிலை. லட்சுமணனின் அம்மா காலமாகிவிட்டார். அப்பா இன்னொரு குடித்தனம் போய்விட்டார். லட்சுமணனுடன் பிறந்தது மூன்று சகோதரிகள். நல்லது கேட்டது பார்க்கவேண்டிய பொறுப்பு லட்சுமணனுக்கு வந்தது.
படிப்பை நிறுத்திவிட்டு கோயம்புத்தூர் சென்ற லட்சுமணன், பைக் விபத்தில் சிக்கிக்கொண்டு கோமாவுக்கு சென்றுள்ளார். பிறகு, கோமாவில் இருந்து மெதுவாக மீண்டுள்ளார். ஆனாலும் விபத்தின் தாக்கத்தால் அவரின் கால்கள் செயலற்றுப் போய்விட்டது. இடுப்புக்கு கீழே உள்ள உறுப்புகள் முழுதாக முடங்கிப் போயுள்ளது. வீட்டிலேயே முடங்கிப்போனார் லட்சுமணன். சுயமாக எதுவும் செய்யமுடியாத நிலை. லட்சுமணனின் ஒரு சகோதரி கணவர் வீட்டில் இருக்கிறார். இன்னொரு சகோதரி சென்னையில் பணியாற்றி வருகிறார். முடங்கிக் கிடக்கும் லட்சுமணனை கவனித்து வருவது கடைசித் தங்கச்சி. அவரும் படிப்பை நிறுத்திவிட்டு, கூலிவேலை செய்து அண்ணனைக் காப்பாற்றி வருகிறார். அவர் மறைவிடமாக குளிப்பதற்கோ, அவசரமாக ஒதுங்குவதற்கோ, நிம்மதியாக உறங்குவதற்கோ வசதியில்லாமல் அல்லல்பட்டு வந்துள்ளார்.
இதுகுறித்த செய்தியை 'நாங்களும் இருக்கிறோம்' அறக்கட்டளையைச் சேர்ந்த நண்பர்கள் தெரியப்படுத்தினர். உடனே விரைந்து செய்தியாக்கினோம். வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, உலகெங்கிலும் உள்ள நக்கீரன் பார்வையாளர்கள் பலர், நம்மைத் தொடர்புகொண்டு, லட்சுமணுக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இந்த வீடியோ பல தரப்பிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. பலரும் மளிகை சாமான் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை லட்சுமணன் குடும்பத்திற்கு செய்யத் தொடங்கினர். இதேநேரம், நம்மைத் தொடர்புகொண்ட வழக்கறிஞரும், திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளருமான தமிழன் பிரச்சன்னா, உதவி செய்யக் காத்திருக்கிறேன் என்றார்.
அதேநேரம், சிவகங்கை ஆட்சியர் மதுசூதனன் அவர்களின் உடனடி உத்தரவின் கீழ், லட்சுமணனின் வீட்டிற்கே சென்ற மாவட்ட திட்ட அலுவலர்கள், ஆய்வு நடத்தினர். அத்துடன், ஒரு வாரத்திற்குள் வீடு வழங்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். டாய்லெட் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடனடியாக விரைந்து தீர்வுகண்ட சிவகங்கை ஆட்சியருக்கு நக்கீரனின் நன்றியும் பாராட்டுகளும்!