கிருஷ்ணகிரி அருகே, சக ஆசிரியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய புகாரின் பேரில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிகரலப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், அத்திமரத்துப்பள்ளத்தைச் சேர்ந்த கவுதம் (17) என்ற மாணவன், பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில், பள்ளியில் திருப்புதல் தேர்வு நடந்தது. அப்போது கவுதம், பக்கத்தில் இருந்த மாணவனைப் பார்த்து தேர்வு எழுதி இருக்கிறார்.
இதைப் பார்த்துவிட்ட தேர்வுக்கூட கண்காணிப்பில் இருந்த ஆசிரியர், பள்ளியின் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், கவுதமிடம் மறுநாள் வரும்போது பெற்றோரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அதன்படி, பள்ளிக்கு மாணவனின் தாயார் வந்துள்ளார். வகுப்பறையில் உங்கள் மகன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவன் கவுதம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர்தான் காரணம் எனக்கூறி கவுதமின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
பிரச்சனையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தலைமை ஆசிரியர் எட்வர்டு ராஜ்குமார் கட்டாய மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டார். மருத்துவ விடுப்பில் இருந்த அவர், ஏப். 6 ஆம் தேதி பள்ளிக்கு வந்து, இங்கு நான்தான் தலைமை ஆசிரியர் என்பதை மறந்துவிட்டீர்களா? எனக்கூறி, சக ஆசிரியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஆத்திரத்தில் இருந்த அவர், தலைமை ஆசிரியர் அறையில் இருந்த மேஜை, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக எட்வர்ட் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.