ஓசூர் அருகே, மாணவர்கள், பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்திய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள முல்லை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அலெக்சாண்டர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளி வளர்ச்சிப் பணிகள் என்றும், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கூறி மாணவர்கள், பெற்றோர்களிடம் 5 லட்சம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளதாக புகார்கள் கிளம்பின.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் புகார் சென்றதை அடுத்து, முதன்மைக் கல்வி அலுவலரை விசாரிக்க உத்தரவிட்டார். புகாரில் முகாந்திரம் இருந்ததால் முதற்கட்டமாக அலெக்சாண்டரை எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர். ஆனாலும், தொடர்ந்து அவர் பண வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவரை ஜூன் 20ம் தேதி பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.