தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கணினிக் கல்வியைப் பயிற்றுவித்ததில் முன்னோடி மாநிலமாக விளங்கியதைப் போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் முதல் மாநிலமாகப் பயிற்றுவிக்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சார்பில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயற்கை நுண்ணறிவை சேர்த்தற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச அரசு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் தனது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பாடத் திட்டத்தில் அமல்படுத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசும் அத்திட்டத்தை மேம்படுத்துவது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் படிப்படியாகத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு மும்மொழிக் கொள்கையும் தமிழ அரசு விரைவில் கொண்டுவரும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் கருத்தை மறுத்துள்ள அரசு, தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே தொடரும் எனத் தெரிவித்துள்ளது. “தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்; மும்மொழிக் கொள்கைக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. பெரியார் காட்டிய வழியில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் மும்மொழிக் கொள்கை ஒருபோதும் உருவாக வாய்ப்பில்லை. தேசியக் கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது. தகவல் தொழில்நுட்பம் குறித்து தமிழ்நாட்டிற்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.