சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து கடந்த 25 ஆம் தேதி (25.10.2023) பிற்பகல் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீச முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் கடந்த 26 ஆம் தேதி காலை (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத்தை துணிச்சலாக மடக்கிப் பிடித்து கைது செய்ததுடன், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் சிறப்பாகப் பணிபுரிந்த போலீசார் 9 பேரையும் சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.