![ki](http://image.nakkheeran.in/cdn/farfuture/QH5AfsjQipsEBqGHPIsU9a-TPuZKHJU9LLR0LiM_7s0/1539477388/sites/default/files/inline-images/kiranpedi.jpg)
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, " பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகள், மீனவர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கெல்லாம் காரணம். ரபேல் போர் விமான ஊழல் குறித்து பிரதமர் எந்தவித பதிலும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். இதில் பிரதமர் மோடிக்கு தொடர்புள்ளதாலேயே அமைதியாக இருக்கிறார் " என மத்திய பா.ஜ.க அரசு மீது அடுக்கடுக்கா குற்றம் சாற்றினார்.
மேலும் " உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை மதிக்காமல் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற தேவநீதிதாஸை மீண்டும் தன்னுடைய ஆலோசகராக நியமித்துள்ளார். இது அதிகாரத்தை மீறி கிரண்பேடி செயல்படுகிறார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம்" என்றவர்,
"துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சொந்த நலனுக்காக சிஎஸ்ஆர் நிதியை தன்னிச்சையாக வசூல் செய்து, செலவு செய்து வருகின்றனர். இதற்கு கிரண்பேடி பொறுப்பேற்க வேண்டும். இதுதொடர்பாக கிரண்பேடி சிஎஸ்ஆர் குழுவுக்கு தகவல் அளிக்க வேண்டும். கிரண்பேடிக்கோ,
அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கோ சிஎஸ்ஆர் நிதி வசூல் செய்ய அதிகாரமில்லை. ஆளுநர் அலுவலகத்திலிருந்து சிஎஸ்ஆர் நிதி கேட்டு தொழில் நிறுவனங்கள் மிரட்டப்படுகின்றன" என கிரண்பேடி மீது பகிரங்கமாக புகார் கூறினார்.
அதேசமயம் நாராயணசாமியின் குற்றச்சாற்றுக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, " புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை செய்யவில்லை. தற்போது பருவமழை நெருங்கும் நிலையில் அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமும், தொழில் நிறுவனங்கள் மூலமும் 25 வழித்தடங்களில் 84 கி.மீ தொலைவிற்கு வாய்க்கால்கள் தூரவாரப்பட்டுள்ளது. தொண்டு செய்ய விரும்புவோர் அப்பணிகளை மேற்கொண்டனர்.
இதுவரை அதற்காக ஆளுநர் மாளிகை மூலம் ஒரு காசோலை கூட பெறப்படவில்லை. தூர்வாரப்படுவதற்கான நிதி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்பட்டு வருகின்றது. நான் துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து சென்றாலும் கூட புதுச்சேரி தொடர்ந்து நீரின்றி தவிக்கும் மாநிலமாக மாறாது. நிறுவனங்கள் அளித்த நிதி சிஎஸ்ஆர் திட்டத்தில் வராது. எனது வேண்டுகோளின்படியே பலரும் நேரடியாக தூர்வாருவோருக்கு பணம் தந்துள்ளனர். நாங்கள் பணம் பெறவில்லை. வரும் காலங்களிலும் பலரின் நிதி உதவியுடன் தூர்வாரும் பணி தொடரும் " என விளக்கம் அளித்தார்.