தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணம் எளிமையான முறையில், ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் இன்றும், நாளையும் (20 & 21ஆம் தேதிகளில்) நடைபெறவுள்ளது.
இதற்காக ஆளுநர் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊட்டி சென்றிருந்தார். சென்னையிலிருந்து கோவை வரை விமானத்தில் வந்த ஆளுநர் ரவி, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் மாளிகையைச் சென்றடைந்தார். இன்றும் நாளையும் மகளின் திருமணம் விழாக்கள் முடிந்த பிறகு வரும் 24ஆம் தேதி வரை அவர் ஊட்டியிலேயே தங்கியிருக்கிறார்.
கரோனா காரணமாக ஆளுநர் ரவி மற்றும் மாப்பிள்ளை வீட்டின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மட்டும் திருமணம் நடைபெறுவதாகத் தெரிகிறது. மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்குவதற்கு ஊட்டியில் மூன்று தனியார் ஓட்டல்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆளுநர் வருகையாலும், அவரது மகள் திருமணத்தின் காரணமாகவும், ஊட்டி ராஜ்பவன் மாளிகை, தாவரவியல் பூங்கா, ஊட்டியில் உள்ள ஓட்டல்கள் என ஊட்டி முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம், ஊட்டி ராஜ்பவன் மாளிகை வெளிச்சுவர் முழுவதும் வெள்ளை நிறம் பூசப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, வெளிர் பச்சை நிறத்திலிருந்த கட்டத்தை முழு வெள்ளையாக மாற்றிருப்பதாக வெளிவரும் தகவல்கள் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாரம்பரியமாகவும், ஊட்டி ராஜ்பவனின் அடையாளமாகவும் இருந்து வந்த வெளிர் பச்சை மாற்றி எதற்காக தற்போது வெள்ளை நிறம் அடிக்கவேண்டும் எனவும் சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.