தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஆளுநருக்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
திருச்சியிலிருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கார் மூலம் தஞ்சாவூருக்கு இன்று மதியம் செல்கிறார். தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர், முன்னாள் ராணுவ வீரர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் சரஸ்வதி மகால் நூலகத்தை பார்வையிடுகிறார். இரவு தஞ்சாவூரில் தங்குகிறார்.
தொடர்ந்து மறுநாள் 13-ம் தேதி காலை தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோயில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்து மதிய உணவுக்கு பின்னர், தென்னக பண்பாட்டு மையத்துக்கு சென்று, வடகிழக்கு மாநிலங்களின் கலைவிழாவான கைவினைப் பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் பங்கேற்று பின்னர் மீண்டும் தஞ்சாவூரில் தங்கும் ஆளுநர், 14-ம் தேதி காலை கார் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.