அன்னையர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி 'வராகி' 2023 - சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று(14-05-2023) நடைபெற்றது. இதில் திரளான பெண் மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். கனிமொழி, என்.வி.என். சோமு, தமிழ்நாடு பெண் மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர். எம். எல். ஷியாமளா, செயலாளர் டாக்டர். நந்திதா தக்கர், தமிழ்நாடு மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர். ரேவதி ஜானகிராம், செயலாளர் டாக்டர் சம்பத்குமாரி, ஜெனிசிஸ் ஐ.வி.எப். மருத்துவ இயக்குநர் டாக்டர். நிர்மலா சதாசிவம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆளுநர் ஆற்றிய உரையில், "அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். என் அம்மாவிற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என் அரசியல் பயணத்தில் இவ்வளவு முன்னேறி இருப்பதற்கு அம்மாவின் ஊக்குவிப்பு தான் காரணம். நான் மருத்துவராக வேலை பார்த்த பொழுது மக்களுக்காக, நேரம் பாராமல் வேலை செய்து கொண்டிருப்பேன். அந்த அனுபவம் தான் இப்பொழுது அரசியல் பணி செய்து கொண்டு இருப்பதற்கும் உதவுகிறது. அரசியலில் வருவதற்கு முன்பு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றினேன். அரசியலுக்கு வந்த பிறகும் நேரத்தை ஒதுக்கி மையங்களுக்கு சென்று மக்களுக்கு உதவி செய்து வந்தேன். ஒவ்வொரு வீட்டிலும் தாய்மார்களும் தங்களது பிள்ளைகளை பெரிய மனிதர்களாக மாற்றுவதற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வயதாகும் பொழுது பிள்ளைகள் அவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆயுஷ்மான் பாரத்' என்கிற மருத்துவக் காப்பீட்டு திட்டம், கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. 'சஞ்சீவி' திட்டமானது கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்வதற்கும் அதற்கான தொகையை அரசே ஏற்றுக் கொள்வதற்கும் வழிவகை செய்கிறது. வராகி' என்றால் சக்தி. பெண்கள் பெரும்பாலும் கல்வியில் முதலிடத்தை பிடிக்கிறார்கள். பெண்களுக்கு ஆரோக்கியம் மிக அவசியமானது. வருடம் தோறும் பிறந்தநாள் கொண்டாடுவதைப் போலவே முழு உடல் பரிசோதனையை பெண்கள் செய்து கொள்ள வேண்டும்.
உடல் நலத்தைப் போல மனநலமும் மிகவும் முக்கியம். அதற்கு அனைவரும் யோகா செய்யும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். எப்படி ஒரு மரமானது தன் கிளைகள் வெட்டப்பட்டாலும் மண்ணில் வேரூன்றி நிற்கிறதோ அதைப்போல பெண்களும் உறுதியாக நின்று கனியாக, நிழலாக சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும். சமுதாயம் என்பது ஆண்-பெண் ஆகிய இருவரின் திரளான கூட்டமைப்பு. எனவே ஆண்கள் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்" என்று பேசினார்.