தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர். எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் இன்று திருச்சி என்.எம்.கே காலணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ம.ம.க. பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது எம்.எல்.ஏ, த.மு.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மாநிலப் பொருளாளர்கள் ஷபியுல்லாஹ் கான், கோவை உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும், 430 தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
கழகத்தின் செயல் அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள், அமைப்பு விதிகளில் திருத்தம் மற்றும் புதிய விதிகளைச் சேர்ப்பது என தலைமை செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. தலைமை செயற்குழுவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் இந்தியைத் திணிக்கக் கூடாது. மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் சமயபுரம் அருகே நாளை நடக்கும் தலைமை பொதுக்குழுக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.