அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் எதிர்ப்பு எழுந்தாலும், மற்றொரு புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், சுவாமி விவேகானந்தர் சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவரது பதிவில், “130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உள்ள உலக சமயப் பாராளுமன்றத்தில் மனிதகுலத்தின் உலகளாவிய சகோதரத்துவம் என்ற சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கினார். காலத்தால் அழியாத இச்செய்தி இன்றைக்கும் மிகவும் பொருத்தமானது” என்று தெரிவித்துள்ளார்.