இமாச்சல பிரதேசம் மாநிலம், சிம்லாவில் 82- வது சட்டப்பேரவையின் சபாநாயகர்களின் மூன்று நாள் கூட்டம், நேற்று (16/11/2021) தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்று வரும் கூட்டம் நவம்பர் 19- ஆம் தேதி நிறைவடைகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, "அரசியல் சாசன அட்டவணை 10ன் படி சபாநாயகரின் அதிகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை ஏற்க முடியாது. சட்டமன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர்கள் காலவரையறையின்றி முடிவெடுக்காமல் இருப்பது விவாதத்திற்குரியது. சட்டமன்றங்கள் அனுப்பக்கூடிய கோப்புகள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். கோப்புகளை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மரபு இருந்தும் ஆளுநர்கள் அதைச் செய்வதில்லை. சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்வது உள்ளிட்டவை சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது" எனத் தெரிவித்தார்.