நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.