சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.
உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.