திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், அய்யம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிய 3 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு முத்துக்குமார், சுந்தர், அய்யப்பன் ஆகியோருக்கு பணி நியமன ஆணையை வழங்கிவிட்டு பேசும் போது, ''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க தொகுதிகள் தோறும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்று அரசுப்பணிகளில் வேலை வாய்ப்புகள் ஏழை எளிய மக்களைத் தேடி வந்து வழங்கப்படுகிறது. அதி.முக ஆட்சிக்காலத்தில் அரசுப் பணியில் சேர 10 லட்சம் முதல் 15லட்சம் வரை லஞ்சம் கொடுத்தால் தான் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலைமை மாறி இப்போது படித்த இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது'' என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபாணி, மாநகர துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், ஆத்தூர் முருகேசன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் மாநகர உறுப்பினர் நெல்லை சுபாஷ் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.