Skip to main content

குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம்

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம்

தமிழகத்தையே உலுக்கி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது என்றும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கிற வகையில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு மத்திய புலனாய்வுத்துறையிடம் இதை ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தையே உலுக்கி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய குட்கா ஊழல் குறித்து தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. சட்டவிரோதமாக குட்கா தயாரித்து விற்பனை செய்வதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் துணை போயிருப்பது மிகவும் வெட்கக் கேடானதாகும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பழக்க வழக்கத்திற்கு ஆளாக்குகிற நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியினர் துணை போவதை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அம்பலப்படுத்தியுள்ளது. 

வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழக அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ரூபாய் 39.91 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் சிக்கியுள்ளது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை இயக்குநர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக அன்றிருந்த பி. ராமமோகன் ராவிடம் ஆதாரங்களுடன் அறிக்கை வழங்கப்பட்டதாக இன்றைக்கு நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது. 

குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறையிடமிருந்து எந்தவிதமான அறிக்கையும் வழங்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசின் சார்பாக கூறப்பட்டது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயலாகும். இதை உணர்ந்த நீதிமன்றம் ஆவணங்களை தேடிக் கண்டுபிடித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த ஆவணங்களை தேடுவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் ஊழல் குற்றவாளிகளை பாதுகாக்கிற முயற்சியில் அ.இ.அ.தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. 
குட்கா ஊழலில் சம்மந்தப்பட்ட அமைச்சர் முக்கிய பொறுப்பை வகித்துக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதேபோல, காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறையின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊக்கப்படுத்துவதைப் போல ஊழலில் ஊறித் திளைத்த அ.இ.அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. அப்படி செயல்படுவதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் எடப்பாடி, பன்னீர்செல்வம்; கூட்டாட்சியின் அணுகுமுறையாக உள்ளது. இருக்கும் வரை ஊழல் செய்வதை நோக்கமாக கொண்ட குதிரைபேர ஆட்சியில் குட்கா ஊழல் பற்றி பாரபட்சமன்றி விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, குட்கா ஊழலில் தமிழக அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை நடத்துவதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. கடந்த 16 மாதங்களாக குற்றவாளிகளை நோக்கி இந்த விசாரணை  செல்லவில்லை என்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதனால் தான் சம்மந்தமில்லாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது. இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கிற வகையில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு மத்திய புலனாய்வுத்துறையிடம் இதை ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

சார்ந்த செய்திகள்