Skip to main content

“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” - ஜவாஹிருல்லா 

Published on 02/06/2021 | Edited on 02/06/2021

 

Government of Tamil Nadu should take action to provide compensation and incentives to all press and media sectors -  jawahirullah

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேபோல், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடும், சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், அதில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 3,000இல் இருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரோனா பெருந்தொற்று காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அடைந்துவரும் துயரங்களைக் குறைக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

 

அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, இலவசப் பேருந்து அட்டை போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒன்றை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பால் மிகப்பெரும்பாலான பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்குப் பயனளிக்காமல் போய்விடும். பத்திரிகை மற்றும் ஊடகத்தில் பணியாற்றும் அனைவருக்கும், அரசு அங்கீகார அட்டையோ, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கும் அடையாள அட்டையோ அல்லது இலவச பேருந்து அடையாள அட்டையோ வழங்கப்படுவதில்லை. ஒரு பத்திரிகையில் பணியாற்றும் மிக முக்கிய நபர்களுக்கும், வெளியூர்களுக்கு பயணிக்கும் ஊடக நபர்களுக்குமே மேற்குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதனால் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர்கள் என பணியாற்றும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் பலன்கள் கிடைக்காத சூழல் உள்ளது.

 

எனவே, ஆர்.என்.ஐ (REGISTRAR OF NEWSPAPERS FOR INDIA)யில் பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து பத்திரிகை மற்றும் ஊடகத்தை நடத்திவரும் நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா இழப்பீடு மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்