தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.டி.ஐ கல்வி நிறுவனங்களில் வெல்டிங், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழில் கல்வி வகுப்புகளைத் துவங்க கோரிய மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மூலம், 16 மாவட்டங்களில் கூட்டுறவு பட்டய பயிற்சியும், 9 மாவட்டங்களில் ஐ.டி.ஐ கல்வி நிறுவனங்கள் மூலம், தையல், கணிப்பொறி, எலக்ட்ரீசியன் உள்ளிட்ட தொழில்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த ஐ.டி.ஐ கல்வி நிறுவனங்களில், ஃபிட்டர், வெல்டர், மோட்டார் வாகன பழுது நீக்கம், ஏசி மெக்கானிக் பயிற்சி ஆகிய வகுப்புகளைத் துவங்க முடிவுசெய்து, 5 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு இந்தத் தொழில் பயிற்சி வகுப்புகளைத் துவங்க முடிவுசெய்து முதலீடு செய்தபோதும், இதுவரை வகுப்புகளைத் துவங்கவில்லை எனக் கூறி பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சேகர் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொழில் பயிற்சி வகுப்புகள் துவங்காததால் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகுப்புகளைத் துவங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.