தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுவருகிறது. இந்நிலையில், விடுதலை வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், இலக்கியப் படைப்பாளிகள், திராவிட இயக்க முன்னோடிகளுக்கு சிலை வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழறிஞர் மு. வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை; சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப. சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும் நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்பட இருக்கிறது; கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது.
மேலும், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு சிலை; அஞ்சலையம்மாள் அவர்களுக்கு கடலூரில் திருவுருவச் சிலை; மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரில் சிலை; அண்ணா பல்கலை.யில் அப்துல் கலாமுக்கு சிலை; ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணிமேரி கல்லூரியில் சிலை; நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சிலை; பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் சிலை; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்குப் புதுக்கோட்டையில் சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.