மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 3340 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 114 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத செல்லவில்லை. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு +2 படித்த 159 ஆண்கள், 629 பெண்கள் என 788 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதியுள்ளனர். அதாவது மொத்தம் உள்ள 107 அரசுப் பள்ளிகளில் 7 பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கவில்லை. அதாவது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள
1) பிரகதம்பாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும்
2) அரசு மேல்நிலைப்பள்ளி புலியூர்
3) அரசு மேல்நிலைப்பள்ளி மாங்குடி
4) எம்.ஏ.கே அரசு மேல்நிலைப் பள்ளி காரையூர்.
5) அரசு மேல்நிலைப்பள்ளி மேலத்தானியம்.
6) அரசு மேல்நிலைப்பள்ளி கோட்டைப்பட்டினம்.
7) அரசு மேல்நிலைப்பள்ளி மீமிசல். ஆகிய 7 பள்ளிகளில் இருந்தும் ஒரு மாணவர் கூட விண்ணப்பம் செய்யாத அவல நிலையில் உள்ளது.
அதேபோல 73 அரசுப் பள்ளிகளில் இருந்து 1 முதல் 9 க்குள் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் அறந்தாங்கி மாதிரிப் பள்ளி உட்பட பல மாதிரிப் பள்ளிகளும் உள்ளது என்பது வேதனையிலும் வேதனை. மேலும் உள்ள 27 பள்ளிகளில் 10 பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். இதில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மட்டும் அதிகபட்சமாக 68 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் மாநில அளவில் குறிப்பிடத்தக்க அளவில் முதன்மை பெற்றிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு பல பள்ளிகளில் விண்ணப்பாக்கவே ஆர்வம் காட்டாத நிலை, பல பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் போனதால் மிக குறைந்த அளவு மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். மேலும் 7.5% பற்றிய விழிப்புணர்வு உள்ள ஊர்களில் இருந்து அதிகமானோர் விண்ணப்பம் செய்யதுள்ளனர். இதற்கு அந்தந்த பகுதி ஆசிரியர்களின் ஊக்கமும் மாணவர்களை போட்டித் தேர்வு எழுத தூண்டியுள்ளது. அதேபோல மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனமும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் விசாரணை செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.