அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு வந்தோமா, மாலை பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றோமா என்று இல்லாமல், அரசுப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் சில ஆசிரியர்கள் செயல்படுவதால், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சி முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. அந்தப் பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களான மண்டபம், கீழமூங்கிலடி, மடுவங்கரை, குண்டு மேடு நவாப்பேட்டை, பெரிய மதகு, தில்லைவிடங்கன், கீழ் அனுவம்பட்டு, மேல் அனுப்பம்பட்டு, அம்பு பூட்டிய பாளையம், தீர்த்தாம்பாளையம், தையா குப்பம், அம்பலத்தாடி குப்பம் உள்ளிட்ட 15- க்கும் மேற்பட்ட உள் கிராம பகுதிகளில் இருந்து 747 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
ஆண்கள் 79 பேர், பெண்கள் 38 பேர் என மொத்தம் 117 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். அதேபோல், பன்னிரண்டாம் வகுப்பில் 83 பேர் படித்து வருகின்றனர். இதில் 48 பேர் ஆண்கள், 37 பேர் பெண்கள் ஆவர். இவர்களுக்கு வரும் மே மாதம் தேர்வு நடைபெற உள்ளதால், கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுத்து படிக்க சூழ்நிலை மற்றும் வசதி இல்லாத காரணத்தால் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் மணிவாசகம் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை சுழற்சி முறையில் ஒருங்கிணைத்து மாணவர்களை மாலையில் பள்ளி நேரம் முடிந்து மற்ற மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை பள்ளியிலேயே தங்க வைக்கிறார். இதில் மாணவர்களை கூட்டு கல்வி கற்கும் முறையில் மாணவ, மாணவிகளை கூட்டம், கூட்டமாக தனித்தனியாக மரத்தடியில் அமரவைத்து தேவையான மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்து தேர்வில் வெற்றிபெற பயிற்சிகளை கொடுக்கிறார்கள்.
அதேநேரத்தில் மாணவர்களின் உடல்நிலையை கருதில் கொண்டு மாலை 06.00 மணிக்கு சுண்டல் வழங்கப்படுகிறது. மேலும், இரவு 08.00 மணி வரை மாணவர்கள் கல்வி கற்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இரவில் அவர்கள் வீடு செல்லும்போது, அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. கிராமப்புறத்தில் வரும் மாணவர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாத சூழலில் தனி வாகனம் ஏற்பாடு செய்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை அனைத்தும் பெற்றோர்களின் அனுமதியுடன், இப்பள்ளியில் ஆசிரியர்கள் செய்வதால் பெற்றோர்கள் மத்தியிலும், அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவாசகம் கூறுகையில், "இந்த பள்ளி கிராமப்புறப்பள்ளி. இங்கு வரும் அனைத்து மாணவர்களும் மிகவும் நலிவடைந்த கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள். இவர்கள் அரசு தேர்வுகளில் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்வு காலங்களில் இதுபோன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாகவும், இதுபோன்ற பயிற்சி மூலம் முதலாம் ஆண்டில் 99 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 98 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அக்காலத்தில் அவர்களின் கிராமத்திற்குச் சென்று ஒரு இடத்தில் அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமரவைத்து பகல், இரவு நேரத்தில் பாடம் நடத்தியுள்ளோம். இந்த தேர்வுக்கு கடந்த மார்ச் 3- ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30- ஆம் தேதி வரை தனி வகுப்புகள் நடைபெறும். ஒரு நாளைக்கு மாணவர்களுக்கு சாப்பாடு, சுண்டல் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் ரூபாய் 6,300, இதனை நண்பர்கள் மற்றும் இதனை அறிந்தவர்கள் மூலமாக பெற்று மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
இதற்கு பள்ளி ஆசிரியர்கள் பாடத்திற்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். பள்ளியில் தலைமை சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். எனவே மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதே எங்களின் இரவு பாடசாலையின் நோக்கம்" என்றார்.