Skip to main content

நீட் தேர்வில் சாதித்த சலவைத் தொழிலாளி மகள்! 7.5% இடஒதுக்கீட்டால் நேர்ந்த நன்மை!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Government school student passed at neet

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது பரிகம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான மாசிலாமணி என்பவரது மகள் 19 வயது மதுமிதா. இவர் கடந்த ஆண்டு எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்துள்ளார். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 600க்கு 480 மதிப்பெண் பெற்றுள்ளார். 


அதன் பிறகு, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், இதற்காக அவர் எந்தப் பயிற்சி மையத்திற்கும் சென்று படிக்காமல், வீட்டில் இருந்தபடியே அவரே படித்து நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் 720க்கு 358 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அரசாணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் மாணவி மதுமிதா மாநில அளவில் 242 ஆவது இடத்தையும் மாவட்ட அளவில் 9 ஆவது இடத்தையும் பெற்று மருத்துவப் படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளார். 
 

இவருக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது கண்டு அவரது பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊர் மக்கள் அனைவரும் மதுமிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசுப் பள்ளியில் படித்த மாணவி, நீட் தேர்வுக்கென்று தனியாகப் பயிற்சி மையத்திற்குச் சென்று படிக்காமல் தானே படித்து நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைத்துள்ளது கண்டு அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்