பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய் குமார், 1990ஆம் ஆண்டு தனது 15 படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். குடியுரிமை கிடைத்த பின் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியுடனான ஒரு பேட்டியில் கன்னட குடியுரிமை குறித்து இவர் பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளானது. விமர்சனம் குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், “இந்தியாதான் எனக்கு எல்லாமே. நான் சம்பாதித்ததெல்லாம் இங்கிருந்துதான். தான் கனடா நாட்டு குடியுரிமையை எடுத்துக் கொண்டதற்கான காரணம் தெரியாமல் மக்கள் விமர்சனம் செய்வது வருத்தமளிக்கிறது” என்றார்.
இதனிடையே கனடா குடியுரிமையைத் திரும்பக் கொடுத்துவிட்டு இந்திய குடியுரிமை கேட்டு 2019ல் விண்ணப்பித்தார். பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்திய குடியுரிமை கிடைத்துவிட்டதாக தனது சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் முதல் முறையாக இந்திய குடியுரிமை வாங்கிய பின் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். மும்பையில் வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது இந்தியா வளர்ச்சியடைந்து வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதை மனதில் வைத்து வாக்களித்தேன். இந்தியர்கள் எது சரி என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்காளர்களின் எண்ணிக்கை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு மே 7ஆம் தேதி குஜராத், மராட்டிம், கோவா உள்ளிட்ட 94 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குபதிவு மே 13ஆம் தேதி தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகார், ஜார்கண்ட், ஒரிசா உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. அக்ஷய் குமார் தவிர்த்து பாலிவுட் பிரபலங்கள் ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.