திருப்பூர் மாவட்டத்தில் ஒரே ஒரு மாணவனுக்காக அரசுப் பள்ளி இயங்கி வருகிற நிலையில் அந்த அரசு பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான மாணவர்கள் பயின்று வந்த நிலையில் பேருந்துநிலைய விரிவாக்கத்திற்காக அந்த பகுதியிலிருந்த வி.பி.புரம் என்ற பகுதியிலிருந்த வீடுகள் மாரியம்மாள் நகர் என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது. இந்நிலையில் அந்த நகராட்சி பள்ளியில் தற்பொழுது முகமது ஆதில் என்ற ஒரே ஒரு மாணவன் மட்டுமே ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அந்த ஒரு மாணவனுக்காக தலைமையாசிரியர் ஒருவர் பணியில் இருக்கிறார். முகமது ஆதிலும் இந்த ஆண்டோடு நகராட்சிப் பள்ளியை விட்டு வெளியேறும் நிலையில் அடுத்த கல்வியாண்டில் அந்த பள்ளியில் பயில்வதற்கு மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி இழுத்து மூடப்படும் நிலை உருவாகி உள்ளதாக அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நகரின் மையப்பகுதி இருக்கக்கூடிய அந்த நகராட்சி பள்ளி மூடப்படாமல் இருக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.