திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களிடம் பணம் வசூல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் ஊர்மக்கள் விளக்கம் கேட்க, அதற்குப் பள்ளியில் இருந்து சரிவர பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பள்ளி நிர்வாகத்தையும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளையும் கண்டித்து போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டினர். இப்படி ஒட்டப்பட்ட அந்த போஸ்டர் “கல்வித்துறை சேவைத்துறையா… கயவர்களின் வேட்டைத் துறையா…” என்ற வாசகத்தோடு ஆரம்பிக்கிறது. தொடர்ந்து "6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ.260, 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ரூ.310, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பிற்கு ரூ.600 என முறைகேடாக வசூல் செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு, முறைகேடாக வசூலித்த பணத்தை மாணவர்களிடம் ஒப்படைப்பு செய்திடு" என்ற வாசகங்கள் அடங்கிய அந்த போஸ்டர், மாணவர்கள், பெற்றோர்கள் நலக் கூட்டமைப்பு சார்ப்பில் ஒட்டப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை செல்ஃபோனில் தொடர்புகொண்டு கேட்ட போது, "பள்ளி வளர்சிப் பணிக்காக எனக் கூறி தலைமையாசிரியர் பணவசூல் செய்திருக்கிறார். உடனடியாக பணத்தை மாணவர்களிடம் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். இனி இது போன்று நடக்காது" எனக் கூறினார்.
ஆனால் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவரும் சூழலில், மாணவர் சேர்க்கையின் போது அரசுப் பள்ளி நிர்வாகம் பணவசூல் செய்வது நியாயமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த விவகாரத்தை விடப்போவதில்லை என அழுத்தமாகக் கூறுகின்றனர் எரியோடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்.