வாணியம்பாடியில் தொடர்ச்சியாக நடைபெறும் சோதனையில் ரேஷன் அரிசி டன் டன்னாக கிடைத்து வருகின்றன. செப்டம்பர் 26ந்தேதி மட்டும் 15.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றியுள்ளனர் அதிகாரிகள். இந்நிலையில் செப்டம்பர் 27ந்தேதி நடைபெற்ற ஒரு ரெய்டில் மண்ணெண்ணய், பாமயில் போன்றவை லிட்டர் கணக்கில் சிக்கியுள்ளன.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமம் விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் தனலஷ்மி என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்கிற தகவல் மாவட்ட வழங்கல் மற்றும் தனி வட்டாட்சியர் பேபி இந்திராவுக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அதிகாரி குமார் உட்பட அதிகாரிகள் செப்டம்பர் 27ந்தேதி மாலை அந்த வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தபோது, வீட்டுக்குள் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் பாமாயில் 1 லிட்டர் பாக்கெட் 142 மற்றும் 150 லிட்டர் மண்ணெண்ணெய் என்று விற்று வந்துள்ளனர். அவைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டன் டன்னாக அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது, தற்போது லிட்டர் கணக்கில் பாமயில், மண்ணெண்ணய் கைப்பற்றப்பட்டுள்ளது. பதுக்கி வைத்து கடத்துபவர்கள் சிக்கியுள்ளார்களே தவிர இந்த பொருட்களை இவர்களுக்கு எப்படி வந்தது, யார் விற்பனை செய்தது, நேரடியாக கடையில் வாங்கினார்களா?, பொதுமக்களிடம் வாங்கினார்களா என எதைப்பற்றியும் விசாரிக்கவில்லை.
நியாயவிலைக்கடையில் வேலை செய்பவர்கள் தராமல், உதவாமல் இவ்வளவு பொருட்களை பெற்று கடத்த முடியாது. அதனால் அவர்கள் யார் என்பதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுகிறது.