கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவிலான பாதிப்பையும் இழப்பையும் சந்திக்க ஆரம்பித்துள்ளன.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, நகர் பகுதியில் சுமார் 2000 முடிதிருத்தும் நிலையங்களும் புறநகர் பகுதிகளில் சுமார் 10,000 முடிதிருத்தும் நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அதேபோல நகர்ப் பகுதிகளில் செயல்பட்டுவந்த 15 திரையரங்குகளும் புறநகர்ப் பகுதிகளில் செயல்பட்டு வந்த 12 திரையரங்குகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
நேற்று (26.04.2021) தமிழக அரசு மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு, தமிழகத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மீன் கடைகள், மீன் சந்தைகள், கோழிக்கறி கடைகள் மற்றும் மற்ற இறைச்சிக் கடைகள் என மொத்தம் 1,200 கடைகள் உள்ளன. இவை அனைத்திலும் புதன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே விற்பனை அதிகம் நடைபெறும். ஆனால் விற்பனை அதிகம் நடைபெறக் கூடிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது பெரிய வருவாய் இழப்பை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், ஒரு கடைக்கு சாதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். மற்ற நாட்களான புதன் மற்றும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும் என்று கூறுகின்றனர்.