Skip to main content

குடிமகன்களிடம் மூக்கை மூடிக் கொண்டு மனு வாங்கிய பெண் அதிகாரி 

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
vp

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வழக்கம் போல் மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.    அதில் ஆண்கள் குழு ஒன்று தனியாக வந்தது.  அவர்களிடம் சென்ற செய்தியாளர்கள் என்ன மனு ? என கேட்க,   "சார் டாஸ்மாக் சார்" என்றனர்.  பதிலுக்கு செய்தியாளர்கள் ஓ... டாஸ்மாக் கடையை மூடணுமா போங்க கலெக்டரிடம் போய் மனு கொடுத்துட்டு வாங்க என்று கூறிவிட்டு வேறு பக்கம் போனார்கள்.

 

 அப்போது அந்த குழுவினர்,  "என்னது டாஸ்மாக் வேண்டாமா? கொஞ்சம் பொறுமையா கேளுங்க சார்.   எங்களுக்கு டாஸ்மாக் கடை வேணும்னு மனு கொடுக்க வந்திருக்கோம்" என தெளிவாக கூற,   அட ஆச்சரியமாக இருக்குது கடை வேண்டாமுனு மனு கொடுக்க வர்றவுங்களைத்தான் பார்த்திருக்கோம்.  கடைவேனுமா சொல்லுங்க ... சொல்லுங்க நல்ல செய்திதான் என்றனர் செய்தியாளர்கள்.

 

பிறகு அவர்கள் தொடர்ந்தனர்,  "நாங்க ஈரோடு 60 வது வார்டு வெண்டிபாளையத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் வாழும் பகுதி தான் அது. காலையில இருந்து வேலை செய்து எங்களுக்கு அலுப்பு தீர ஒரு குவாட்டர் குடிப்போம். அப்பதான் தூக்கம் வரும். எங்க கஷ்டத்தை தெரிஞ்சுகிட்டு அரசாங்கம் எங்க பகுதியில புதிதா ஒரு டாஸ்மாக் கடைய போன மாசம் திறந்திச்சு. இந்த கடையிலில இருந்து அரை கிலோமீட்டர்ல இன்னொரு கடை இருக்குது.  அங்குள்ள பார் உரிமையாளர் வருமானம் குறையுதுனு எங்க பகுதியில உள்ள பத்து பாஞ்சு பேரை தூண்டி விட்டு கடையை மூட போராட்டம் நடத்தினாங்க.  இதனால தற்காலிகமாக டாஸ்மாக் கடையை மூடிட்டாங்க. இப்ப நாங்க குடிக்கனும்னா ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோலார் என்ற இடத்திற்கு போகனும்.  அங்கு வாகன போக்குவரத்து அதிகம் .  விபத்து ஏற்பட்டு பல உயிர்போகுது. இங்குள்ள கடையில பாதுகாப்பா குடிச்சிட்டு வீட்டுக்கு போயிடுவோம்.  ஆகவே தான் இந்த கடைய மீண்டும் திறக்கனும்னு கலெக்டர் ஐயாவிடம் மனுக்கொடுக்க வந்திருக்கோம் " என்றனர். 

 

குடிமகன்கள் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மூக்கை பொத்திக் கொண்டு,  "ஏங்கைய்யா அதிகாரி கிட்ட மனு கொடுக்க வரும் போவதாவது குடிக்காம வரக்கூடாதா? என கும்பிடு போட்டார்.

 

கடையை மீண்டும் திறக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் குடித்துவிட்டு காத்திருக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என கூறி விட்டு பாட்டிலும் கையுமாக நடையை கட்டினார்கள் குடிமகன்கள்.

 

சார்ந்த செய்திகள்