சிதம்பரத்தில் உள்ள அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ 25 ஆயிரம் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கடந்த 3 நாட்களாக கல்லூரி வளாகத்தில் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை 4 வது நாள் போராட்டத்திற்கு பயிற்சி மருத்துவர்கள் ஒன்றுகூடியபோது கல்லூரியின் முதல்வர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து, மருத்துவ கல்லூரி இயக்குனர் மருத்துவர் நாராயண பாபு மற்றும் துணை இயக்குனர் இளமதி ஆகியோர் இரண்டு நாட்களில் பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக எழுத்து மூலம் கடிதம் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து எங்களின் கனிவான கோரிக்கையை அரசு ஏற்கும் என்ற நம்பிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். அதேநேரத்தில் கோரிக்கை நிறைவேறவில்லையென்றால் தினந்தோறும் கல்லூரி வளாகத்தில் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.