மாணவர்களைப் பட்டினி போடும் அரசு விடுதி!
திருச்சியில் உள்ள அரசு விடுதியில் இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு உணவு வழங்கமால் பட்டினிபோடும் அவலம் அரங்கேறியுள்ளது.
திருச்சி அருகே திருவெறும்பூரில் உள்ளது அரசு ஐ.டி.ஐ. இங்கு வெளியூரில் இருந்து பயிலும் மாணவர்களுக்காக இரண்டு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. புதிதாக ஒரு விடுதியும் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதியில் மாணவர்களை தங்குவதற்கு அனுமதித்த கடந்த இரண்டு மாதங்களாக உணவு வழங்காமல் நிர்வாகம் இருந்துள்ளது. இதனால், வேறுவழியின்றி மாணவர்கள் வெளியில் சாப்பிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெளியில் சாப்பிட முடியாத பெரும்பாலான ஏழை, எளிய மாணவர்கள் மதியம் ஒருவேளை மட்டும் உணவருந்தி பட்டினி கிடந்து வருகின்றனர்.
இதுகுறித்து விடுதி நிர்வாகமும் அரசு தரப்பில் இருந்து உணவு வழங்குவதற்கான நிதி வழங்கப்படவில்லை என அலட்சியமாக பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள மாணவர்கள், ‘விடுதியில் மாணவர்கள் ஒருவேளை உணவு மட்டுமே உண்டு பட்டினி கிடக்கிறோம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உணவுக்கு நிதி இல்லாத நிலையில், மாணவர்களை எப்படி தங்குவதற்கு அனுமதி அளித்தார்கள் என்று தெரியவில்லை’ என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.