
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் அரசு நிதி உதவி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று(15.2.2024) மாலை பள்ளி முடிந்த பின்பு மாணவர்கள் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதரில் இருந்த காட்டு ஆமணக்கு செடியில் உள்ள காய்களை மாணவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பள்ளி நேரம் முடிந்து இரவு வீட்டிற்குச் சென்ற மாணவர்களுக்கு லேசான வயிற்று வலி வந்துள்ளது. இதனையடுத்து மாணவர்களிடம் விசாரித்த பெற்றோர் மாணவர்கள் காட்டு ஆமணக்கு காய்களை சாப்பிட்டது தெரிய வந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சியான பெற்றோர்கள் அழுதபடி பிள்ளைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.
எட்டு மாணவர்களையும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு தற்போது 8 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.